Sunday, 13 January 2019

மதிப்புமிகு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணன் அவர்களின் பொங்கல் வாழ்த்து செய்தி*


**********************************
*பொங்கல் வாழ்த்தும் போராட்டக் களமும்*
******************************
*தைத் திருநாள், தமிழர் திருநாள், உழவர் திருநாள், தமிழர்கள் கொண்டாடும் திருநாளாகும். பொங்கல் திருநாள் உழவர்களுக்கும் உழவுக்காக உழைக்கின்ற மாடுகளுக்கும் போற்றி வணங்குகின்ற அர்த்தமுள்ள விழாவாகும். போகிப்பண்டிகை பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பார்கள். நீண்ட நேரம் அதற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை.பொங்கல் நாளன்று குடும்பத்து உறவுகள் அனைவரும் ஓரிடத்தில் கூடி பொங்கலிட்டு மழைக்கும், வெயிலுக்கும் காரணமான பகலவனுக்கு நன்றி கூறும் விழாவாகக் கொண்டாடுவார்கள். 16 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் மாடு என்றால் செல்வம் நம் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தை தேடித் தருகின்ற மாடுகளுக்கு விழா எடுத்து மகிழ்கின்ற விழா மாட்டுப் பொங்கலாகும். மாட்டுப்பொங்கலன்று தெருவில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஏதாவது ஒரு இடத்தில்20 பேர் சேர்ந்து கூட ஒன்றாக பொங்கலிடுவார்கள். பொங்கலிட்டு படைக்கின்ற பொழுது அவரவர்கள் மாடுகளை கொண்டு வந்து பொங்கலிடும் இடத்தில் வரிசையாக கட்டி வைப்பார்கள். பொங்கலிட்ட பின் மாடுகளுக்குப் படைத்து அவரவர்கள் மாடுகளுக்கு வண்ண  மாலை சூட்டி சோறு ஊட்டி மகிழ்வார்கள். பொங்கல் படைக்கும் இடத்தில் வண்ண குச்சிகளைக் கொண்டு வந்து வைத்துப் படைப்பார்கள் படைத்து முடித்த பின் அந்த வண்ண குச்சிகளை கையால் ஒடித்து நான்கு மூலைகளுக்கும் எறிவார்கள். இதனுடைய பொருள் உங்களை வேலை வாங்குகிறபோது நாங்கள் இந்தக் குச்சியால் உங்களை அடித்திருப்போம்.இந்நாள் முதல் உங்களை அடிக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து தூக்கி அதனை எறிந்துவிட்டோம். நாளை முதல் நீங்கள் சுதந்திரமாக ஓடிச் சென்று விளையாடலாம் என்று தெரியப்படுத்துவது தான் இந்த விழாவாகும்.  அதை சுதந்திரமாக விரட்டி விடுவது தான் ஜல்லிக்கட்டு என்றும், எருதுவிடும் விழா என்றும், மஞ்சு விரட்டு என்றும் அழைக்கிறோம். தை மாதம் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக கொண்டாடுகிறோம். ஏர்ப்பின்னது உலகம், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்று வள்ளுவர் பெருந்தகை கூறியுள்ளார். மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் கிராமத்தில்  கரிநாள் என்பார்கள்‌. ஆனால் அது அனைவரும் கண்டு மகிழும் களிநாள் ஆகும். உழவன் நாற்று முடி நட்டால் தான் மன்னனின் மணிமுடி தழைக்கும் என்பார்கள். ஆனால், இன்றைய விவசாயிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை என்கிறார்கள். விவசாயிகளின் நலனை காப்பதற்காக எத்தனைப் போராட்டங்களை எந்த விதமான போராட்டங்களை நடத்தினாலும் மத்திய அரசும் கண்டு கொள்வதில்லை மாநில அரசும் கண்டு கொள்வதில்லை என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். வள்ளுவர் பெருந்தகை சொன்ன குரலின் பொருளுக்கு அர்த்தமில்லா வரிகள் ஆக்குகிறார்கள். விரக்தியடைந்த விவசாயிகள் சோறூட்டும் நிலத்தினை வீட்டு மனைகளாக விற்கத் தொடங்கிவிட்டார்கள். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் என்ற வார்த்தையின்  மீது நம்பிக்கை வைத்து  விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை இந்த விழா வருவதால் தான் வீடுகளுக்கு வெள்ளையடிப்பதும், தூய்மைப்படுத்துவதும் பழக்கமாகவும் வழக்கமாகவும் மக்கள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.நாமெல்லாம் விவசாயிகளின் பிள்ளைகள் என்னதான் பாதிப்பு இருந்தாலும் தமிழர் திருநாளை உழவர் திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம்.அந்த காலத்தில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை வாங்குவதற்கு கடைகளில் வரிசையில் நின்று அலைமோதுவார்கள்.ஆனால் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு முகநூலிலும், புலனத்திலும் வாழ்த்துகளை இதயம் தொட்டு பரிமாறிக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வருவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. ஆனால், முகநூலில் வாழ்த்துக்கூற ஒரு நொடியில் முகத்தை பார்த்தே வாழ்த்து கூறிக்கொள்கிறார்கள். இயக்க குடும்பத்து உறவுகளுக்கும், ஜாக்டோ ஜியோ என்ற  கூட்டு குடும்பத்து உறவுகளுக்கும் இல்லந்தோறும் வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்ற உணர்வோடு நல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறேன்.*

*நாமும் போராட்ட களமும் என்ற தலைப்பில் காணும்(16.01.2019) பொங்கலன்று விவாதிப்போம்.*

*யாமிருக்க பயமேன் என்பார்கள் ஜாக்டோ ஜியோ என்ற கூட்டமைப்பு இருக்கிற வரையில் அங்கன்வாடி மையங்களுக்கு சென்று பணியாற்ற வேண்டிய நெருக்கடி நிலையினை தடுத்து நிறுத்துவோம் என்ற உறுதியினை 2381 ஆசிரியக் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.*

*பொங்கல் நல்வாழ்த்துகளுடன் அண்ணன்,*

*வா.அண்ணாமலை,*
*ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*

No comments:

Post a Comment