***********************************
*ஜாக்டோ ஜியோ 24.01.1 2019 அன்று சென்னையில் கூடிய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி 25.01. 2019 அன்று வேலை நிறுத்த போராட்டமும் மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டமும், எழுச்சிக்கே எழுச்சியூட்டுகிற வகையிலும், அரசுக்கு அதிர்ச்சியூட்டுகிற வகையிலும் நடைபெற இருப்பதை பெருமையுடன் பகிர்ந்து கொள்வோம். என்னதான் நீதிமன்றம் உத்தரவு போட்டாலும் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நீதிமன்றங்கள் அரசினை நிர்ப்பந்தம் செய்ததுண்டா? எச்சரிக்கை ஆணை வழங்கியது உண்டா?எதுவுமே இல்லாமல் பரிசீலனை செய்யுங்கள் என்று சொல்வதால் அரசு செய்ய முன்வருமா? அதனால் தான் எங்களுடைய இதயக் குமரலினை போராட்ட வடிவில் இந்த அரசுக்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். மதுரை நீதிமன்றம் போராட்டத்திற்கு விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. சென்னை உயர்நீதிமன்றம் மாணவர்களின் கல்வி நலன் கருதி 25ஆம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவு போடுகிறது. இரண்டும் உயர் நீதிமன்றம் தான் இரண்டு நீதிமன்றத்தில் இரண்டு அமர்வு நீதிபதிகளின் கருத்து தான் இது. நாங்கள் நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால், நடுநிலையான நீதியைத் தான் எதிர்பார்க்கிறோம். 23ஆம் தேதி வட்டத் தலைநகர்களில் செய்த மறியலில் உளவுத்துறை புள்ளிவிவரப்படி 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளார்கள்.24.01.2019 அன்று வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற மறியலில் 2 லட்சத்து 32 ஆயிரம் பேர் கைதாகி உள்ளார்கள். இரண்டு நாட்களிலும் நாலரை லட்சம் பேர் கைதான வரலாறு தமிழக போராட்ட வரலாற்றில் இதுவரையில் நடைபெற்றது இல்லை என்பதை எண்ணுகிறபோது அடித்தளத்தில் உள்ள அவர்களுடைய உணர்வுகளை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டாமா?இந்தியப் பெரு நாட்டில் இதுவரை ஆசிரியர் மற்றும் தொழிற்சங்க வரலாற்றில் இரண்டு நாள் மறியல் போராட்டத்தில் நான்கரை லட்சம் பேர் கலந்து கொண்டதை கேட்டு இனந்தெரியாத அதிர்ச்சி அடைந்து அப்படியா? என்று நம்மை கேட்கிறார்கள். அதுதான் தமிழ்நாடு என்கிறார்கள். 85 ஜாக்டி, 88 ஜாக்டி ஜியோ, 2003 ஜாக்டோ ஜியோ டெஸ்மா போராட்டங்களில் கூட கைது எண்ணிக்கை இந்த எண்ணிக்கையினை தொடவில்லை என்பதை உணர்கிறோம். இதற்கெல்லாம் காரணம் 5 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இடைநிலை ஆசிரியர்கள் உட்பட நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் ஊதிய முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒப்பந்த அடிப்படை நியமனங்கள் பகுதிநேர ஊதிய பாதிப்பு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.ஓய்வூதியதாரர்களையும் சேர்த்து 19 லட்சம் பேருக்கு ஊதிய நிலுவைத் தொகை கிடைக்கவில்லை. அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம், உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இணைப்பு, 10 மாணவர்களுக்குள் உள்ள பள்ளிகள் மூடல், சத்துணவு மையங்கள் மூடல், பதவி இழப்புகள் அத்தனையும் ஒன்று சேர்ந்து தான் ஆசிரியரையும்,அரசு ஊழியரையும், பணியாளரையும் உணர்ச்சிப்பிழம்பாக களத்திலே நின்று கோரிக்கை முழக்கமிட வைத்துள்ளது. கைதானவர்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மங்கையர் திலகங்கள் தான் என்பதை மறுக்கத்தான் முடியுமா? 25.01.2019 நாளை நடைபெறக் கூடிய மறியலில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்று அணிவகுத்து வர இருக்கிறார்கள். என்ன செய்யப்போகிறது இந்த அரசு?17B நோட்டீஸா? குற்றச்சாட்டா? இந்த அரசு என்னதான் செய்யப் போகிறது என்று பார்ப்போம். தமிழக அரசே, பள்ளிக்கல்வித்துறையே 17 b குற்றச்சாட்டு நோட்டீஸ் அனுப்புகிறீர்களா? 10 லட்சம் பேருக்கு தயார் செய்யுங்கள். ஆசிரியர்கள் நியமனமா? 3 லட்சம் பேருக்கு நியமனம் செய்யுங்கள். கல்லூரி பேராசிரியர்கள் நியமனமா? 3000 பேருக்கு நியமனம் செய்யுங்கள். பணியாளர்கள் நியமனமா? ஐந்து லட்சம் பேருக்கு நியமனம் செய்யுங்கள். ஜெட் வேகத்தில் செயல்படுங்கள். இது எல்லாம் யாரை மிரட்டுவதற்கு? இந்தப் பூச்சாண்டியைக் காட்டி பாலகர்களைக் கூட பயமுறுத்த முடியாது என்பதை உணர வேண்டும். முதலில் உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஒரு எஃகு கோட்டை நூற்றுக்கணக்கான விழுதுகள் இறங்கியுள்ள ஒரு ஆலமரம் அதில் அசைவினை ஏற்படுத்த நீங்கள் முயற்சி செய்யவேண்டாம். பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி தீர்வு காண முயற்சி செய்வதுதான் அரசுக்கும் நல்லது துறைக்கும் நல்லது என ஒரு இனிய அணுகுமுறை விரும்பி உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். சனி, ஞாயிறு விடுமுறைதிங்கட்கிழமை மதுரை நீதிமன்றத்தில் எங்களுடைய வழக்கு நல்ல முடிவாக வரும் என்று எதிர்பார்க்கிறோம்.28.01.2019 நடைபெறக்கூடிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தலைமைச் செயலக சங்கம் உட்பட தமிழகத்தில் இதுவரையில் கலந்து கொள்ளாது இருக்கிற அனைத்து சங்கங்களும்,அமைச்சுப் பணியாளர், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கங்களும் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்கள்.காவல் துறை அமைச்சு பணியாளர் சங்கம் டிஜிபி அலுவலகத்தை விட்ட வெளியில் வந்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளார்கள் என்பதை இந்த நாடு அறியும்.28.01.2019ஆம் தேதி தமிழகம் கண்டிராத ஒரு ஜாக்டோ ஜியோ யுகப்புரட்சி நடைபெற உள்ளது என்பதை பெருமிதத்துடன் அறிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசே இனியும் எங்களை சோதனை வேள்வியில் இறக்கிவிடாமல் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம்.28ம் தேதி மதுரையில் கூடி ஜாக்டோ ஜியோ எடுக்கின்ற முடிவும் போராட்ட வடிவமும் எப்படிப்பட்டதாக அமையும் என்பதை அன்று வெளியிட உள்ளோம். ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ரத்தநாளங்களே, இதயத்துடிப்பே, இயக்கப் பாதுகாப்பு பெரும் படையே 12 லட்சம் பேரின் நலனுக்காக களம் இறங்கி போராடும் பாதுகாவலர்களே, நம்மை அலட்சியப்படுத்தும் அரசினை, துறையினை நம் பலம் என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உணர்ச்சிப்பெருக்கால் பாடிய பாடல் வரிகள் தான் நம் நினைவிற்கு வருகிறது."செந்தமிழுக்கொரு தீமை வந்த பின்னால் இந்த தேகம் இருந்தொரு லாபம் உண்டோ" மானம் காத்திட சுயமரியாதைப் போரினை கரம் கோர்த்து நின்று வெற்றி பெறும் வரை நடத்திக் காட்டுவோம் நாளை பள்ளியோ அலுவலகங்களோ அசையாச் சொத்தாக இருக்கும் நம்மவர்களில் எவரும் அங்கு இருக்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்துங்கள்.ஏழை மாணவனின் கல்வி நலனை நாம் கண்ணெனப் பேணுவோம் என்ற கொள்கையில் எந்நாளும் உறுதியுடன் இருப்போம். மாவட்டத் தலைநகர்களில் உணர்வின் சங்கமமாக சங்கமிப்போம். வென்று காட்டுவோம். தொடர்ந்து களத்தில் நிற்போம்.*
*போராட்ட வாழ்த்துகளுடன் அண்ணன்,*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*
No comments:
Post a Comment