மாணவர்களின் பெற்றோரால் சரியான விவரங்கள் கொடுக்கப்பட்டு பள்ளி பதிவின்போது பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்படிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது இருதரப்பு வாதங்களுக்கு பிறகு பிறந்த தேதியை திருத்தம் செய்யுமாறு உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருந்தாலோ மட்டுமே உரிய திருத்தம் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமேயன்றி பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட பின் பிறந்த தேதி /தந்தை பெயர் /மாணவர் பெயர் /முகப்பெழுத்து மற்றும் சாதித் திருத்தம் மேற்கொள்வது என்பது தமிழ்நாடு இடைநிலைக் கல்விச்சான்று விதி எண் - 5 ன்படி ஏற்கத்தக்கதல்ல.
பத்தாம் வகுப்பு அரசு தேர்விற்கு பெயர்ப்பட்டியல் அனுப்பப்படுவதற்கு முன்னர் உரிய அசல் சான்றுகளின் அடிப்படையில் பிறந்த தேதி /தந்தை பெயர் /மாணவர் பெயர் /முகப்பெழுத்து /சாதித் திருத்தங்களை செய்வதற்கு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிப்படிப்பை முடித்து மதிப்பெண் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட பின் தந்தை பெயர் மற்றும் முகப்பெழுத்து திருத்தம் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளது.
Since the petitioner has already published her name change in the government gazette as stated supra, the same is sufficient for all purposes and everybody is bound to accept the same as the changed name of the petitioner. Hence there is no error in the order passed by the respondent i. e) Director of school education refusing to carry our the name or initial change in the certificates as requested by the petitioner.
சாதி திருத்தம் கோரும் நிகழ்வுகளில் முதலில் தவறான சாதி குறிப்பிடப்பட்டு பின்னர் வருவாய்த்துறை வழங்கும் சாதி சான்றிதழின்படி திருத்தம் கோரப்பட்டால் பள்ளி மாற்றுச் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ளலாம். ஏனென்றால் வருவாய்த்துறை வழங்கும் சாதி சான்றிதழே இறுதியானதும் ஏற்றக்கத்தக்கதுமாகும்.
பிறந்த தேதி /தந்தை பெயர் /மாணவர் பெயர் /முகப்பெழுத்து /சாதி திருத்தம் கோருவோர் கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் என்றால் பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குள் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மூலம் பயின்றவர்கள் அத்துறை மூலம் நேரடியாக உரிய ஆவணங்களுடன் தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதர அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பிறந்த தேதி /தந்தை பெயர் /மாணவர் பெயர் /முகப்பெழுத்து /சாதி திருத்தம் கோரி தங்கள் நியமன அலுவலர் மூலம், பேரிடர் மேலாண்மை, சேப்பாக்கம் - 600005 மூலம் நேரடியாக அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறைக்கு கருத்துக்கள் அனுப்பக்கூடாது.
உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில் மாற்றம் கோருபவர்கள் தீர்ப்பின் அசல் மற்றும் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் 10 வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் /மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். ஒருதலைபட்ச தீர்ப்பின் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என்பதால் அத்தகைய தீர்ப்புகள் பெறப்பட்டால் நீதிமன்றம் ஒருதலைபட்சமாக வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மாவட்ட கல்வி அலுவலர் /முதன்மை கல்வி அலுவலர்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஒருதலைபட்ச தீர்ப்பின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைக்கக்கூடாது. வழக்குகளில் தலைமைச் செயலாளர் /கல்வித்துறை செயலாளர் /மாவட்ட ஆட்சியர் ஒரு தரப்பினராக இருந்தால் அவர்களை நீக்கம் செய்ய மனு தாக்கல் செய்திட வேண்டும். ஏனெனில் கல்விச் சான்றிதழ்களில் திருத்தம் செய்யும் அதிகாரம் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் இதர துறைத் தலைவர்களின் பரிந்துரையின் பேரில் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது.
பள்ளி நிர்வாகத்தால் தவறு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது காலண்டரில் இல்லாத தேதி பிறந்த தேதியாக பதிவு செய்யப்பட்டிருந்தாலோ அல்லது உரிமையியல் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்பளித்திருந்தோலோ கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன், மாணவர் 10 வகுப்பு பயின்ற பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சார்ந்த முதன்மை கல்வி அலுவலர் /மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கருத்துக்களை பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பயின்றவர்கள் அவர்கள் சார்ந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் /ஆங்கிலோ இந்திய பள்ளி ஆய்வாளர் மூலம் மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குநர் மூலம் அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளியில் பயின்றவர்கள் என்றால் ஆதிதிராவிட நலத்துறை மூலம் நேரடியாக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பக்கூடாது. இத்தகைய கருத்துகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது. முற்றிலும் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் நேரடியாக அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களது கருத்துக்களையும் முதன்மை கல்வி அலுவலர்கள்/மாவட்ட கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கக்கூடாது.
கருத்துக்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் :-
1. அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் 2 நகல்கள் (If Laminated, Lamination, Must be Removed)
2. 1 ஆம் வகுப்பு முதல் 5 /8 ஆம் வகுப்பு வரை பயின்ற பதிவுத்தாள் (Record Sheet) அசல் மற்றும் 2 நகல்கள். (பதிவுத்தாளில் உள்ள பிறந்த தேதி திருத்தம் செய்யப்பட்டிருந்தாலோ, பதிவுத்தாளில் உள்ள தேதிக்கு மாற்றான தேதி திருத்தம் கோரப்பட்டாலோ திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது. மாவட்ட கல்வி அலுவலர்கள் இவற்றை பரிந்துரைக்கக்கூடாது).
3. பள்ளி சேர்க்கை விண்ணப்பம் - நகல்
4. SSLC - உறுதிமொழிச் சான்று நகல் (SSLC Declaration Form)
5. பிறப்புச் சான்றிதழ் அசல் மற்றும் நகல்.
6. பள்ளி சேர்க்கை / நீக்கப் பதிவேட்டில் மாணவர் பெயர் உள்ள பக்க நகல்
7. தவறு ஏன் ஏற்பட்டது என்பதற்கான தலைமையாசிரியர் விளக்கம்.
8. நீதிமன்ற தீர்ப்பின் அசல் மற்றும் 2 நகல்கள்
9. மாவட்ட கல்வி அலுவலரின் பரிந்துரை
அனைத்து நகல்களும் சான்றொப்பமிட்டிருக்க வேண்டும்.
No comments:
Post a Comment