**********************************
*புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்*
*****************************
*சனவரி 1 2019 ஆம் ஆண்டின் தொடக்க நாளாகும். அது ஆங்கிலப் புத்தாண்டாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் பெருவிழா டிசம்பர் 25 உலகம் முழுவதும் கொண்டாடி வருவது போல சனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் ஏசுபிரான் பிறந்த நாளான டிசம்பர் 25 ஐ கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே கொண்டாடி மகிழ்ந்தாலும் சனவரி 1 அனைத்து மதத்தினரும் வாழ்த்தினை பரிமாறிக்கொள்ளும் நாளாக கொண்டாடி வருவது நடைமுறையில் இருந்து வருகிறது. கி.மு ,கி.பி என்று அழைப்பதை எப்படி மாற்ற இயலாதது ஆகிவிட்டதோ, அதுபோல் Calendar Year என்பதையும் அலுவலக நடைமுறையில் மாற்றமுடியாத ஒன்றாகும். சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு அதை கிராமத்தில் வருடப்பிறப்பு என்று கொண்டாடி மகிழ்வார்கள். இந்நாளில் விவசாயப் பெருமக்கள் நல்லேர் பூட்டி மகிழ்கின்ற சிறப்பான நாளாகும். தமிழ் மொழி ஆய்வாளர்களைக் கேட்டால் சித்திரை ஒன்றை பஞ்சாங்க ஆண்டு என்பார்கள். ஆனால், தமிழ்ப் புத்தாண்டு என்பது மக்களின் பழக்கவழக்கங்களில் இரண்டறக் கலந்த ஒன்றாகி விட்டது. தமிழ்மொழி ஆய்வாளர்களைக் கேட்டால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்கிறார்கள். அந்த உணர்வினர் அப்படியே கொண்டாடிவருகிறார்கள். எந்த விமர்சனமும் நமக்குத் தேவையில்லை. ஆங்கிலப் புத்தாண்டை நடைமுறைக்காக நாம் பயன்படுத்திக் கொண்டாலும், திருவள்ளுவர் ஆண்டை நாம் மறப்பதில்லை. ஆங்கில ஆண்டோடு 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் திருவள்ளுவராண்டு 2050 ஆம் ஆண்டு எனப் போட்டு அடைப்புக்குறிக்குள் ஆங்கில ஆண்டை குறிப்பிட்டு வருவது பெருமைக்குரிய செய்தியாகும். எது எப்படி இருப்பினும் சனவரி 1 புத்தாண்டில் இதயம் மலர்ந்து முகமலர்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துகளை நாம் எங்கெங்கிருந்தாலும் முகநூல் வழியாகவும், புலனத்தின் வழியாகவும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.*
*Happy New Year to all*
*Kindly convey my best wishes to all our brothers and sisters*
*I will meet you in person,*
*Thanking you*
****************************
*தமிழக ஆசிரியர் கூட்டணி தொடங்கிய ஆண்டாக எடுத்துக்கொண்டால் 36 ஆவது ஆண்டில் அந்த பயணத்தை தொடருகிறோம். ஜாக்டோ ஜியோ தொடங்கிய ஆண்டை கணக்கிட்டால் பதினாறாம் ஆண்டில் நமது பயணம் தொடர்கிறது . பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என வாழ்த்த வேண்டிய நிலைமையில் நாம் இல்லை. 2017 - 18 ஆம் ஆண்டுகளில் இழந்ததை மீட்டெடுப்போம் என்ற பொதுக் கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டமைப்பு போராட்டமாகவும், தனித்தனிச் சங்கங்களின் போராட்டங்களாகவும் தீவிரமாக நடத்தி வருகிறோம். ஜாக்டோ ஜியோ என்ற கூட்டு சக்தியின் மூலமாக ஏழாவது ஊதியக் குழு அரசாணையை மட்டும் தான் நம்மால் பெற முடிந்தது. அதைத் தவிர்த்து ஊதிய முரண்பாடுகளையோ, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தினையோ, அனைத்து பிரிவினரின் ஊதிய முரண்பாடுகளையோ நம்மால் இதுவரை தீர்வு காண முடியவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டி எல்லா ஆட்சியாளர்கள் காலத்திலும் போராடி வருகிறோம். இன்னமும் ஒரு முடிவு எட்டப்படவில்லை. 2003 இல் இருந்து ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களுடைய தற்காலிக பணிக் காலம் இன்னும் வரன்முறைப்படுத்தப்படவில்லை. கல்வி தனியார்மயமாவதை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. ஆனால் இழப்பதற்கு இனி எதுவுமேயில்லை என்ற நிலைமையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பள்ளிக்கல்வித்துறையின் அபாய அறிவிப்புகள் எல்லாம் நம் உணர்வுகளை கொதி நிலைக்கு ஆளாக்கி வருகிறது. அதிகாரம் பரவலாக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தோம். தற்போது அதிகாரத்தை மாவட்ட அளவில் குவித்து வைத்து அழகு பார்த்து வருகிறது பள்ளிக்கல்வித்துறை ஆகும். பள்ளிக்கல்வித்துறையினை சீரமைப்பதாக சொல்லிக்கொண்டு சீரழித்து விட்டார்கள். பள்ளிக்கல்வித்துறையின் பாரம்பரியமும் அழகும் கற்பிழந்த நிலைமையில் காண்கிறபோது நம்மால் பொங்கி எழாமல் சிவனே என்று இருக்க முடியுமா? 15 மாணவர்களுக்கு குறைந்த தொடக்கப்பள்ளி என்றார்கள், இப்போது 10 மாணவர்களுக்கு குறைந்த பள்ளிகளை மூடுவோம் என்கிறார்கள். மூடாதே மூடாதே என்று குரல் கொடுத்தவுடன் மூடவில்லை இணைப்பு இணைப்பு என்கிறார்கள். அரசாணை வெளிவர இருக்கிறது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியில் பிற பாடங்களில் 15 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் அப்பாட பிரிவினையும், ஆசிரியரையும் அப்புறப்படுத்தி ஆணை வழங்கி வருகிறார்கள். இப்போது புது பூகம்பப் புரட்சியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றாக இணைத்து அரசாணை வெளியிடுவதற்கு பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். 3500க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி இழக்கிறார்கள். 10 மாணவர்களுக்கு குறைந்த பள்ளியில் 2000 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி இழக்கிறார்கள். ஆக மொத்தம் 5500 தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி இழக்கிறார்கள். 5500 சத்துணவு மையங்கள் மூடப்பட்டு அமைப்பாளர்களும், சமையலர்களும் பதவியிழக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஆக்குதலை கைவிட்டு எல்லாவற்றையும் அழித்து ஒழிக்கிற அரசாகவும் பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரைப் பொறுத்தவரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தன்வயப் படுத்திக் கொண்டு அவர் நினைத்ததை எல்லாம் ஒப்புதல் பெற்று அரசாணையாக வெளியிட்டு வருகிறார். பள்ளிக்கல்வித்துறையில் சேதாரத்தையும் ஏற்படுத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சொந்த மாநிலம் உத்திரப்பிரதேசம் அங்கு யோகி அரசு நடக்கிறது. தமிழகத்தில் எடப்பாடி அவர்கள் அரசு நடக்கிறது .தமிழக பள்ளிக் கல்வித் துறையில் யோகி அரசின் நிர்வாகத்தினை திணித்து வருகிறார். 2003 டெஸ்மா காலத்தில் ஒன்றே முக்கால் லட்சம் பேர் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட போது அவர்களைப் பாதுகாத்து மீண்டும் பணியில் அமர்த்திய இயக்கம் தான் ஜாக்டோ ஜியோ அமைப்பாகும். நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்ட அத்தனை பேரையும் மீண்டும் பணியில் அமர்த்தி பாதுகாத்த வரலாற்றுக்கு சொந்தமான இயக்கம் ஜாக்டோ ஜியோ அமைப்பாகும் என்பதை யாரும் மறக்க வேண்டாம். புத்தாண்டில் ஒரு உறுதியை நாம் கரம் கோர்த்து எடுத்துக் கொள்வோம். சனவரி 7 மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யும் அறிக்கையில் நாம் எதிர்பார்க்கும் கோரிக்கைகள் வெற்றி பெறவில்லை என்றால் ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயரை புதிதாக வைக்கிறார்கள். ஆனால், நமது ஜாக்டோ ஜியோ போராட்டம் புயலாக மாறவேண்டாம் காட்டுத்தீயாக பரவட்டும். இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம். ஜாக்டோ ஜியோ அமைப்பின் பாரம்பரிய போர்க்குண வரலாற்றினை மீண்டும் புதுப்பித்து காட்டுகின்ற ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வோம்.*
*மீண்டும் போராட்டக் களத்தில் கரம் கோர்த்து, கரம் குலுக்கி ஒன்றாக சந்திப்போம்*
*புத்தாண்டு வாழ்த்துகளுடன்*
*வா. அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*
No comments:
Post a Comment