Thursday, 17 January 2019

ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணன் வா அண்ணாமலை மற்றும் மாநிலப் பொறுப்பாளர்களின் ஆர்ப்பாட்ட அறைகூவல் வேண்டுகோள்.*


************************************
*18.01.2019 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை அறவே ரத்து செய்ய வலியுறுத்தி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்  நடைபெற  ஜாக்டோ ஜியோ அறைகூவல் விடுத்துள்ளது.*
***********************************
*தமிழக அரசு அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்காக 2381 இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்து ஆணை வழங்கியுள்ளது.தொடக்கக்கல்வி துறையில் இருந்து சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்ற அங்கன்வாடி மையங்களுக்கு எந்த ஆசிரியரின் ஒப்புதலின்றி பணியிட மாற்றம் செய்வது விதிமுறைகளை மீறி செய்கிற அநீதியாகும்.மழலையர் கல்வி வேறு தொடக்கக்கல்வி நிலைமை வேறு, தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் 1 முதல் 5 வகுப்புகளுக்கு கற்பித்தல் பணிக்காக மேற்கொள்ளப்பட்ட பயிற்சியாகும். மழலையர் கல்விக்கென மாண்டிசோரி முறையில் பயின்ற பெண் ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கிறார்கள். அவர்களை நியமனம் செய்து ஜூன் மாதம் முதல் நடத்தச் சொல்லலாம் அதை நாம் வரவேற்கிறோம். மாறுதல் விதிமுறைகளின் படி பணியிட நிரவல் செய்ய வேண்டிய மாதமும் ஜனவரி மாதம் அல்ல. அதுவும் ஒரே சமயத்தில் 2381 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்துள்ளது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் 40 கிலோமீட்டர் தூரத்திலும், ஒன்றியத்திலிருந்து வேறு ஒன்றியத்திற்கும் பணியிட மாற்றம் செய்து பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளார்கள். இவர்கள் அனைவரும் தொடக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்பினில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர்கள். இவர்களை பணியிட மாற்றம் செய்வதால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த 2381 ஆசிரியர்களையும் பாதுகாப்போம் என்று உறுதி எடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பு செயல்பட்டு வருகிறது. பணியிட மாற்ற ஆணையினை யாரும் வாங்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. எந்த பாதிப்பு வந்தாலும் பாதுகாப்போம் என்று உறுதியும் அளித்துள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களிடம் ஆணை வழங்க இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.வட்டாரக் கல்வி அலுவலர்கள் அவ்வாறு ஆணை வழங்கினால் ஜாக்டா ஜியோ முடிவு படி நாங்கள் இந்த ஆணையை வாங்குவதை தவிர்த்து கொள்கிறோம் என்று உறுதியுடன் அவர்களிடம் பதில் தெரிவிக்க வேண்டும். சில தலைமை ஆசிரியர்கள் ஆணைகள் பெற்று உதவி ஆசிரியர்களிடம் அளித்தால் உதவி ஆசிரியர்கள் துறை மாற்றுவதற்கு எங்கள் ஒப்புதலின்றி அளிக்கிறீர்கள் அதற்கு 15 நாட்கள் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என தெரிவிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்களும் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு  அவர்கள் கடிதம்கொடுத்துள்ளதால் உடனடியாக நாங்கள் விடுவிக்க வாய்ப்பில்லை என்பதை தெரிவிக்க வேண்டும்.பணி நியமனம் செய்யப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணி ஏற்க முன் வராத சூழ்நிலை ஏற்படின் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரே தொடங்கி வைக்க வேண்டும் என கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது. எனவே அந்தப் பள்ளி தலைமை ஆசிரியரும் ஜாக்டோ ஜியோ முடிவு படி அந்தப் பணியினை முற்றிலும் தவிர்த்து விட வேண்டுமென கேட்டுகொள்ளப்படுகிறார்கள். இதற்கு மேலும் தலைமையாசிரியர்களும் உதவி ஆசிரியர்களும் மாற்றாக செயல்பட்டால் அவர்கள் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பில் உள்ள சங்க உறுப்பினராக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றே நாங்கள் கருதுகிறோம். இதற்கு மேலும் அவர்கள் அச்சப்பட்டால் மருத்துவ விடுப்பில் சென்று விடலாம். தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். ஏனைய ஆசிரியர் இயக்கங்களும் சென்னை, மதுரை உயர் நீதிமன்ற கிளைகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக அங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதை ரத்து செய்ய வலியுறுத்தி 18.01.2019 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி தான் இந்த அரசின் முடிவுக்கு முடிவு கட்ட வேண்டும். மாலையில் அணி அணியாக இயக்க ஆசிரியர்களும், ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் மாவட்டத் தலைநகர்களில் அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பெரும் திரளாக பங்கேற்க வேண்டுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் உரிமைக்குரலாக அறைகூவல் விடுக்கிறோம். இதனை விட்டுவிட்டால் அந்த 10 மாணவர்களுக்கு குறைவான பள்ளியினை மூடுவார்கள். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளை இணைத்து விடுவார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கொள்கை முடிவு படி 100 மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு தான் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் உண்டு என்பார்கள்.ஆறு முதல் எட்டு வகுப்பு வரை 120 மாணவர்கள் இருந்தால்தான் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் உண்டு என்பார்கள். அரக்கத்தனமான இந்த முடிவுகளை எல்லாம் செயல்படுத்த தயாராகி வருகிறார்கள்.ஒவ்வொரு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், பணியாளர்களும் பணிப் பாதுகாப்பிற்காக தமிழக அரசின் முடிவை எதிர்த்து மானத்தைக் காப்பதற்காக நடத்தப்படும் போராட்டமாக, முடிவில்லாத ஒரு போராட்டமாக நடத்தத் திட்டமிட வேண்டும். 18 ஆம் தேதி மாவட்டத் தலைநகர் போராட்டம் தமிழக அரசின் பிடிவாதத்திற்கும் எதேச்சதிகாரத்திற்கும் முடிவு காட்டுகிற போராட்டமாக அமையட்டும்.*

*தொடக்கக் கல்வித் துறையை, பள்ளிக்கல்வித்துறையை பாதுகாத்திட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தினை தடுத்து நிறுத்திட மாவட்டத் தலைநகர் நோக்கி இந்தப் படை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா ? என கோரிக்கை முழக்கமிட்டு போர்ப்பரணி பாடி ஆர்ப்பரித்து வாரீர் ! வாரீர் !!*

*பணியில் சேராதவர்களை ஜாக்டோ ஜியோ காப்பாற்றும். பணியில் சேர்ந்தவர்களை எவராலும் காப்பாற்ற முடியாது நம்பினார்க் கெடுவதில்லை*

*அறைகூவல் விடுக்கும் அண்ணன், வா.அண்ணாமலை,*
*ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*

*மா. நம்பிராஜ், மாநிலத் தலைவர்.*
*அ. வின்சென்ட் பால்ராஜ்,*
*பொதுச் செயலாளர்.*
*க.சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி*

No comments:

Post a Comment