****************************
*சனவரி 22 முதல் தொடர் வேலை நிறுத்தம்-ஜாக்டோ ஜியோ அறிவிப்பு*
*****************************
*இன்று (07.01. 2019) மதுரையில் கூடிய ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் சனவரி 22 முதல் 7 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள் .உணர்ச்சிப் பிழம்புடன் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். மதுரை உயர்நீதிமன்றத்தில் 09.01.2019 அன்று புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து தொடர்பான ஸ்ரீதர் குழு அறிக்கையினையும், ஊதிய முரண்பாடு களைவதற்காக அமைக்கப்பட்ட சித்திக் குழு அறிக்கையினையும் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தமிழக அரசின் சார்பாக அறிவித்துள்ளார்கள். இன்று விசாரணை மேற்கொண்ட மதுரை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 11.01.2019 அன்று இந்த இரண்டு குழு அறிக்கையின் முடிவினையும் ஜாக்டோ ஜியோ தரப்பில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். இத்தனை நாள் பொறுத்துக் கொண்டோம் 11.01. 2019 வரை பொறுத்திருப்போம். 11 என்ற எண்ணின் அமைப்பிற்கு ஏற்ப முடிவு வருமோ என அச்சப்பட வேண்டியுள்ளது. இடைப்பட்ட நாட்களில் பொங்கல் விழாவை கொண்டாடுவோம்.போராட்டத்தை தயாரிப்பதற்காகவும் கால அவகாசம் எடுத்துக்கொண்டு சனவரி 22 முதல் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுகிற வரையில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு எடுத்து அறிவித்துள்ளார்கள்.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருக்கின்ற தொடக்கப் பள்ளிகளை இணைப்பதற்கு தீவிரம் காட்டி வரும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களுக்கு ஜாக்டோ ஜியோ கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடன் தலையிட்டு பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.தொடக்கக்கல்வித்துறையினையும், பள்ளிக்கல்வித்துறையினையும் முற்றிலும் சேதாரப்படுத்தி அழித்துவிட்டு சுயநிதி பள்ளிகளையும், தனியார் பள்ளிகளையும் மறைமுகமாக வளர்ப்பதற்கு உள் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது என முடிவெடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்கள். 10.01.2019 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் ஜாக்டோ ஜியோ தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து பள்ளிகளின் இணைப்பினை அறவே கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை விண்ணப்பம் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஜனவரி 22ஆம் தேதி தொடங்குகின்ற போராட்டம் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒரு முடிவு கட்டும் வரையிலும், இடைநிலை ஆசிரியர்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைத்து வகை பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்படும் வரையிலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என முடிவெடுத்து அறைகூவல் விடுத்துள்ளார்கள்.தொடர் போராட்ட அறிவிப்பு போர்க்குணத் தீயாக எங்கும் பரவட்டும். 30 நாள் தொடர் போராட்டமா? நடத்துவோம், 40 நாள் போராட்டமா? நடத்துவோம் இல்லை நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் போராட்டமா? நடத்திக்காட்டுவோம். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது அரசாக இருக்க வேண்டுமே ஒழிய ஜாக்டோ ஜியோ வாக இருக்கக்கூடாது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்குப் பிறகு போராட்டத் திருநாளை கொண்டாடுவோம் வாருங்கள். அனைத்து போராட்டங்களையும் நடத்தி வெற்றியினைப் பெற்று தந்த தலைமைகள் இன்னும் உங்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வினை நெஞ்சில் நிலைநிறுத்திக் கொண்டு போராட்ட வெற்றிப்படிக் கட்டுகளில் பயணத்தை தொடருவோம் வாருங்கள்.*
*"அரசின் எச்சரிக்கையினை துச்சமென புறந்தள்ளுவோம்."*
*"இயக்கம் இருக்கப் பயமேன்"*
*போராட்ட வாழ்த்துகளுடன்,*
*வா.அண்ணாமலை,*
*ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*
No comments:
Post a Comment