*ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்களின் அறைகூவல்.*
*
********************************
1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தாய்மொழியாம் நம் இன்பத் தமிழ் மொழியைக் காத்திட மொழிப்போர் களத்தில் தங்களையே இழந்து தன்னலம் மறந்து தன்னுயிர் நீத்த தன்மானத் தமிழ் வீரர்களின் நினைவேந்தி வீரவணக்கம் கூறும் நாளாகும். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு மொழிக்காக உலக அரசியலில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு களமிறங்கி உயிரை துச்சமென மதித்து உணர்வு பொங்க வீதியில் இறங்கி நடத்திய போராட்டம்தான் அந்த மொழிப் போராட்டமாகும். மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாளினை ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும்தான் சொந்தமானது என பொது நோக்கர்கள் கருதுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அந்தக் காலத்தில் தாய்மொழிக்கு, தமிழுக்கு ஆபத்து என்றால் தமிழாசிரியர்களும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் முன்னணியில் நின்று போராடியதகத்தான் வரலாறு உண்டு.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் செந்தமிழுக்கு தீமை வந்த பின்னால் இந்த தேகம் இருந்தொரு லாபம் உண்டோ? என்றார். அதே செந்தமிழுக்கு என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாளாகும் என்றார். எப்பக்கம் வந்து இந்த இந்தி புகுந்துவிடும் எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும் கட்டாய மொழி இந்தி என்றாலோ கன்னங்கிழித்திட நேருமென்று ஆவேசக் குரல் எழுப்பினார். இதனையே தான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் வாழ்க இந்தி ஒழிக என்று கோரிக்கை முழக்கமிட்டு சிங்கத்தமிழன் சின்னசாமி முதல் தீ வைத்து தன்னையே கொளுத்திக் கொண்டு உயிர் தியாகங்கள் செய்தவர்களின் பட்டியலை இந்நாளில் நினைவு கூர்வோம்.
ஒரு மொழிக்கு ஆபத்து வருகிறது என்றால் அதைத் தடுத்து நிறுத்தாமல் சிவனே என்று இருந்துவிட்டால் அந்த மொழியின் அடையாளம் அழிந்து அந்த இனத்தின் அடையாளத்தையே அழித்து விடும்.எனது தாய் மொழியை பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடமாட்டேன் என்று அன்று சொன்னார்கள். ஆனால் இன்று எல்கேஜி முதல் உயர்கல்வி வரை தமிழ் மொழியை மறந்து தாய் மொழியை மறந்து ஆங்கில மொழி, இந்தி மொழியை கற்பதில் ஆர்வம் காட்டி வருகிற தமிழ்க் குடும்பங்களை காணுகிற போது நெஞ்சு பொறுக்குதில்லையே? இந்தி படித்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் வேலை பார்க்கிறார்கள். ஆனால் இந்தி படித்தால் எங்கும் வேலை பார்க்கலாம் என்று கற்பனை குதிரை ஏறி பயணம் செய்கின்ற நம்மவர்களை கண்டு வேதனையுறுகிறோம். இவர்களின் எளக்காரத்தைப் பார்த்துதான் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழித் திட்டத்தை மூன்றாம் வகுப்பு முதல் திணிப்பதற்கு துணிந்துள்ளார்கள். ஆங்கிலம் ஒரு பொது மொழி அதைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான். முதல் வகுப்பில் ஆங்கிலம் பாட மொழியாக இருக்கலாம். ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை முற்றிலும் ஆங்கில வழிக் கல்வியாக மாற்றுவதற்கு முனைப்பு காட்ட எண்ணினால் தன்னுயிர் ஈந்த மொழிப்போர் தியாகிகளின் ஆன்மா இவர்களை மன்னிக்குமா?
ராஜாஜி மகளை காந்தியடிகளின் மகனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அன்று முதல் ராஜாஜி அவர்கள் தன் மகளுக்கு எழுதிய கடிதம் இந்தியில் தான் இருந்து வந்தது. ஒரு முறை கடிதத்தை பார்த்த காந்தியடிகள் அவர்கள் உங்கள் மகளுக்கு உங்கள் தாய்மொழியில் கடிதம் எழுதுங்கள். நான் என் குஜராத்தி மொழியில்தான் எழுதுகிறேன் என்று உரிமையுடன் கடிந்து கொண்டிருக்கிறார். இன்று இந்தி எதிர்ப்புப் போராட்ட ஆவேச உணர்வலைகள் ஒட்டுமொத்த தமிழ்க் குடும்பங்களுக்கும் ஏற்படவில்லை என்றால் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மாமன், அத்தை, அண்ணன், அக்கா, தங்கை என்ற உறவினை ஆங்கில மொழியிலும், இந்தி மொழியிலும் மொழி பெயர்த்து நம் பேரப்பிள்ளைகளுக்கு சொல்ல வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. தாய்மொழியை காக்கின்ற பொறுப்புணர்வு நம் ஆசிரியர்களுக்கு இருந்தாகவேண்டும். மொழிக்காக உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு மொழியை விழியை பாதுகாப்பது போல் பாதுகாப்போம் என்று இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.
*வீரவணக்கம்!வீரவணக்கம்!! மொழிப்போர் தியாகிகளுக்கு எங்கள் வீர வணக்கம்!காப்போம்! காப்போம்!! தாய்த் தமிழை என்றும் காப்போம்!.*
*உணர்வலைகளுடன் அண்ணன்,*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) தமிழக ஆசிரியர் கூட்டணி, அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*
No comments:
Post a Comment