Thursday, 23 January 2020

அந்தந்தப் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்

*பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பால் அரசாணை வெளிவருகிறது, வரவேற்கிறோம்!! அறிவிப்புகள் தொடரட்டும். ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளரின் வேண்டுகோள்.*
********************************
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வேறு பள்ளிக்குச் சென்று தேர்வு எழுத வேண்டும் என்ற திட்டத்துடன் பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வந்தது. இதனை தெரிந்து கொண்ட நாம் இயக்கத்தின் சார்பில் அந்தந்தப் பள்ளிகளில் தான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும், ஒட்டுமொத்த மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு பள்ளிக்கல்வித்துறை வழி விட வேண்டாம் என கவனத்தை ஈர்க்கும் வகையில் முகநூலிலும் (Facebook) புலனத்திலும் (WhatsApp) நீண்டதொரு கருத்தொருமித்த பதிவினை வெளியிட்டிருந்தோம். மாண்புமிகு முதலமைச்சரின் நுண்ணறிவு பிரிவுக்கும், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை இணைச் செயலாளர் அவர்களுக்கும், திட்ட இயக்குனர் அவர்களுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுக்கும், தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கும், தேர்வுத்துறை இயக்குனர் அவர்களுக்கும் என அனைத்து நிலை இயக்குனர்களுக்கும், அனைத்து நிலை இணை இயக்குனர்களுக்கும், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தகவலினை புலனத்தின் (WhatsApp) மூலமாக தெரியப்படுத்தி இருந்தோம். தமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், அனைத்து நிலை ஊடகங்களுக்கும் செய்தியினை அனுப்பி இருந்தோம். 19.01.2020 அன்று ஆயிரக்கணக்கான சுற்றுக்கு நமது பதிவு வலம் வந்து கொண்டிருந்தது. இன்று காலை கோவையில் பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இரண்டு பிள்ளைகள் பயிலும் பள்ளியாக இருந்தாலும், ஐந்து பிள்ளைகள் பயிலும் பள்ளியாக இருந்தாலும் அந்தந்தப் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம் அரசாணை உடன் வெளிவருகிறது என்று பேட்டி அளித்து இருந்தார். வரவேற்கிறோம், இந்த அறிவிப்புகள் தொடரட்டும். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் அலைபேசியில் தொடர்பு கொண்டு அரசாணை வெளிவர இருப்பதாக நம்மிடம் தெரிவித்தார்கள். இந்த தேர்வு ஒரு திறனறித் தேர்வு என்று தான் நம்மிடம் தெரிவிக்கிறார்கள். பாண்டிச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அவர்கள் புதிய கல்விக் கொள்கை படி ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு  நடத்தும் திட்டம் எங்கள் மாநிலத்தில் இல்லை என உறுதிபட அறிவிக்கிறார். ஆனால் நமது கல்வி அமைச்சர் அவர்களோ நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் தொடர்ந்து நடைபெறும் என்கிறார். தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

*தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருக்கு பணி நீட்டிப்பு இல்லையா?*

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றிய நடையநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இதச்சி அவர்கள் 31.12.2019 உடன் பணி நிறைவு பெற்று விட்டார். அவருக்கு பணி நீட்டிப்பு இல்லை என சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலரும், சிவகாசி வட்டாரக் கல்வி அலுவலரும் உறுதிபடத் தெரிவித்து விட்டார்கள். துணைப் பொதுச் செயலாளர் திரு.அ.முனியாண்டி அவர்கள் அண்ணன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்களின் கவனத்திற்கு இரண்டு நாட்களாகக் கொண்டு வந்தார். உடன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு தலைமை ஆசிரியர் பணியிடத்தினை surplus பணியிடமாக இதுவரை அறிவித்ததாக தொடக்கக் கல்வி துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் நடைமுறையில் இதுவரை  இல்லை. தொடக்கக் கல்வி ஆசிரியர்களை பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டே அலுவலர்கள் செய்து வருகிறார்கள். உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியையை பணி நீட்டிப்பில் தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களும் உடனடியாக விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணி நீட்டிப்பில் தொடர வேண்டுமென குறிப்பாணை வழங்கினார். இன்று முதல் எவ்வித தடையுமின்றி தலைமை ஆசிரியை அந்தப் பள்ளியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்பதை தகவலுக்காக தெரிவித்துக் கொள்கிறோம். உடனடி நடவடிக்கை மேற்கொண்டு செயல்பட்ட தொடக்ககல்வி இயக்குனர் அவர்களுக்கு நன்றி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். வரவேற்க வேண்டியதை வரவேற்று மகிழ்வோம்! பாதிப்பு கண்டு பதிவுக் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும்.

*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) தமிழக ஆசிரியர் கூட்டணி, அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*

No comments:

Post a Comment